தாய்மொழியில் புரதவியல் (Proteomics in mother tongue)

இப்பதிவை ஒலி வடிவில் கேட்க இங்கே சொடுக்கவும்
For Audio click here

எல்லோருக்கும் வணக்கம்!! என் பேரு மைத்ரேயன். உலகத்துல பல விதமான ஆராய்ச்சி நடக்குது, ஆனா எந்த மூலைல ஆராய்ச்சி நடந்தாலும் அதன் விவரங்கள் ஆங்கிலத்த்துலதான் வெளியாகுது. ஆங்கிலம் இல்லாம அறிவியல் ஆராய்ச்சி இல்லைங்கற காலம் வந்துருச்சு. அதுவும் நம்ம இந்தியால ஆங்கிலம் தெரிஞ்சாதான் பிழைக்க முடியும்ங்கற நம்பிக்கை எல்லார்த்துக்கும் இருக்கு. என்னதா எல்.கே.ஜி-ல இருந்து ஆங்கிலம் படிச்சாலும் நாம யோசிக்கிறதும், மற்ற விஷயங்கள புரிஞ்சிகிறதும் நம்ம தாய் மொழிலதான். அதனாலதான் எனக்கு தெரிஞ்ச சில அறிவியல் விஷயங்கள தமிழ்ல உங்களோட இந்த தொடர்ல பகிர்ந்துக்கலாம்னு நினைக்கிறேன்.

சரி, நாம விஷயத்துக்கு வருவோம். இருபத்திமூன்றாம் புலிகேசில “வரலாறு முக்கியம் அமைச்சரேனு” நம்ம வைகைப்புயல் சொல்றது நினைவிருக்கா? அரசியல் வரலாறு மட்டுமல்ல அறிவியல் வரலாறும் முக்கியம். கொஞ்சம் யோசிச்சு பாருங்க, நாம அறிவியல் பாடபுத்தகத்துல படிக்கறது எல்லாமே ஒருவகைல நடந்து முடிந்த வரலாற்று விஷயங்கள்தான். அதன்படி பார்த்தா நான் இன்றைக்கு புரதவியலோட (proteomics) வரலாற்றைப் பேசபோறேன். புரதவியலா? இயற்பியல் தெரியும், வேதியியல் தெரியும் அது என்ன புரதவியல்? அப்படின்னு கேட்கறீங்களா, அது வேறொன்றுமில்ல புரதங்கள பற்றி படிக்கிறது புரதவியல். அட! அதாங்க ப்ரோடீன்ஸ் (proteins) பற்றி படிக்கறது, அப்படி தமிழ்ல சொல்லுனு சொல்றீங்களா. இதுதாங்க நம்ம “தாய் மொழியோட” நிலைமை.

புரதவியல பற்றி பார்கறதுக்கு முன்னாடி புரதம் எப்படி உருவாகுதுனு பார்ப்போம். பள்ளில நம்ம அறிவியல் வாத்தியார் மூலக்கூறு உயிரியலின் மையக்கோட்பாடு (Central Dogma of molecular biology) அப்படின்னு ஒன்னு சொன்னாரே நினைவிருக்கா? ஒரு உயரினத்தைப்ப்ற்றிய செய்தி டி.என்.ஏ-ல (DNA) இருந்து படியெடுத்தல் (transcription) என்கிற நிகழ்வின் மூலமா ஆர்.என்.ஏ-விற்கு (RNA) சென்று பின் மொழிபெயர்ப்பு (translation) என்கிற நிகழ்வின் மூலமா புரதத்திற்கு செல்கிறது அப்படிங்கறதுதா இந்த மூலக்கூறு உயிரியலின் மையக்கோட்பாடு. இத ஏன் சொல்றேனா, நம்ம உடம்புல பலவிதமான செயல்பாடுகளுக்கும் புரதங்கள்தான் காரணம். ஆனால் இந்த புரதங்கள் இப்படிதான் இருக்கனும், இப்படிதான் செயல்படனும்னு சொல்ற அதிகாரி டி.என்.ஏ மூலக்கூறுகளால் ஆன ஜீன் / மரபணு (gene). செம்மண், மணல், தண்ணீர்க் கலவையை ஒரு அச்சில் போட்டு காயவைத்து பின் சுட்டு செங்கல் செய்வது போல, மரபணுவின் கட்டளைக்கிணங்க அமினோ அமிலங்களைக்கொண்டு செய்யப்படுவதுதான் இந்த புரதங்கள். இந்த மரபணுவோ நேரடியாகக் கட்டளை இடாமல், mRNA (messenger-RNA) என்னும் தூது-ஆர்.என்.ஏ மூலம் இந்த கட்டளைகளை அனுப்புகிறது. இந்த தூது-ஆர்.என்.ஏ-க்களை உருவாக்கும் நிகழ்வுக்கு பேர்தான் படியெடுத்தல். தூது-ஆர்.என்.ஏ-வைப் படித்து அமினோஅமிலங்களைக் கொண்டு புரந்தங்களைச் செய்பவை rRNA (ribosomal-RNA) ரைபோசோமல்-ஆர்.என்.ஏ என்பவை. இந்த நிகழ்வுக்கு பேர் மொழிபெயர்ப்பு. சுருக்கமா சொல்லனும்னா மரபணுல இருந்து புரதங்கள் வருது.

அப்போ இந்த மரபணுக்களைப் பற்றி படிச்சா போதுமே அப்படின்னு சொல்றீங்களா? மனிதர்கள்ட சுமார் 2௦,௦௦௦ மரபணுக்கள்தான் இருக்கு ஆனா 80,000-ற்கும் மேற்பட்ட புரதங்கள் இருக்குனு விஞ்ஞானிகள் கணிச்சிருக்காங்க. அதாவது ஒரு மரபணுல இருந்து ஒன்றுக்கும் மேற்ப்பட்ட புரதங்கள் உற்பத்தி ஆகுது. இவை அனைத்தும் ஒரே செல்ல உற்பத்தி ஆகறது இல்ல. நம்ம உடம்புல 250 வகையான செல்கள் இருக்கு. அந்த செல்களுக்கு ஏற்ற மாதிரி வெவ்வேறு வகையான புரதங்கள் உருவாகுது. இப்படி உருவாகுற புரதங்கள நாம புரதத்தொகுதினு (proteome) சொல்லுவோம். இந்த புரதங்களை/புரதத்தொகுதிகளைப் பற்றி ஒருசேர பெரிய அளவில் ஆராய்ச்சி செய்வதுதான் புரதவியல் (proteomics). புரதவியல்னா என்னனு சொல்லவே இவ்ளோ நேரம் ஆகிவிட்டது, அதன் வரலாற அடுத்த தொடர்ல பார்ப்போம்.

For Audio click here
இப்பதிவை ஒலி வடிவில் கேட்க இங்கே சொடுக்கவும்

3 comments

Leave a Reply

%d bloggers like this: